சர்வதேச விமான சேவை - ஜூலை 15 வரை தடை நீட்டிப்பு

புதுடில்லி :கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு விதிக்கப்பட்ட தடை, அடுத்த மாதம், 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், வெளிநாடுகளுக்கு சரக்கு விமான போக்குவரத்து சேவைகள் தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுதும், மார்ச், 25ம் தேதி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு சில நாட்களுக்கு முன், சர்வதேச விமான சேவை தடை செய்யப்பட்டது. மேலும், உள்ளூர் விமான சேவையும் தடை செய்யப்பட்டது. நாடு முழுதும், ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், ஊரடங்கு, சில தளர்வுகளுடன், ஐந்தாவது முறையாக, வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா பரவலால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வர, 'வந்தே பாரத்' திட்டத்தை, மத்திய அரசு, மே, 6ம் தேதி துவக்கியது.

இந்த திட்டத்தின் கீழ், இதுவரை பல நாடுகளில் இருந்து, 3.6 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள், தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மே, 25ல், உள்ளூர் விமான சேவைகள், குறைந்த அளவில் துவக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக, பல நாடுகளிலும், சர்வதேச விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், 'மற்ற நாடுகளில், சர்வதேச விமான சேவை துவக்கப்பட்டால் தான், இந்தியாவிலும் துவக்க முடியும்' என, சில நாட்களுக்கு முன், விமான போக்குவரத்து அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டி.ஜி.சி.ஏ., எனப்படும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சர்வதேச விமான சேவையை துவக்க வேண்டும் என, இயக்குனரகத்துக்கு, பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, சர்வதேச விமான சேவையை துவக்குவதற்கான சூழ்நிலை பற்றி, ஆய்வு செய்யப்பட்டது.பல நாடுகள், கொரோனாவின் பிடியிலிருந்து இன்னும் விடுபடவில்லை. அதனால், சர்வதேச விமான சேவையை துவக்க கூடிய சூழ்நிலை இல்லை.

இதனால், சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை, ஜூலை, 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்கள் சேவைகள் தொடரும். அதே நேரத்தில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட நாடுகளுக்கு, விமானங்கள் இயக்கப்படும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

'வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் இருந்து, 3.6 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள், சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்' என, வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று கூறியதாவது:வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களில், ஐந்து லட்சத்து, 13 ஆயிரத்து, 47 பேர், இந்தியாவுக்கு திரும்ப விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், மூன்று லட்சத்து, 64 ஆயிரத்து, 209 பேர், சிறப்பு விமானங்கள் மூலம், இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, அண்டை நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, எல்லை வழியாக அழைத்துவரும் பணிகளும் நடந்து வருகின்றன. நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து, 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளில் கடற்படை கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு, ஐ.என்.எஸ்., ஜலஷ்வா கப்பல் சென்றடைந்துள்ளது. இந்தக் கப்பல், அங்குள்ள இந்தியர்களுடன், ஜூலை, 2ம் தேதி இந்தியாவுக்கு புறப்படும்.

நான்காம் கட்ட மீட்பு நடவடிக்கை, ஜூலை, 3ம் தேதி துவங்கும். அதில், நாடு திரும்ப ஆர்வம் காட்டும் இந்தியர்கள் அதிகம் இருக்கும் நாடுகள் மீது, கவனம் செலுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.இந்தியா திரும்புவோர், இனி ெவளிநாடு செல்லாத பட்சத்தில், அனைவருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.