சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல்... பீப்பிள் ஆக்ஷன் கட்சி அமோக வெற்றி.. (1965 முதல் தொடரும் ஆட்சி)


சிங்கப்பூரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில்,பீப்பிள் ஆக்ஷன் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை பிடித்தது.

சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான பீப்பிள் ஆக்ஷன்' கட்சி ஆட்சி நடக்கிறது. 1965 முதல் ஆட்சியில் இருக்கிறது இந்த கட்சி. லீ செய்ன் லூங் ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்தார்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே தேர்தல் நடைபெற்ற மிகச் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. கொரோனா காரணமாக, ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை 880ல் இருந்து 1100 ஆக அதிகரிக்கப்பட்டது.

அதிகபட்சம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3000 பேர் வரை வாக்களித்தனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை ஓட்டுப் பதிவு நடைபெற்றது.

ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் நள்ளிரவு வெளியிடப்பட்டன. பீப்பிள் ஆக்ஷன் கட்சி, மொத்தமுள்ள 93 இடங்களில், 83 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதேநேரம், இக்கட்சி, 61.24 சதவீத ஓட்டுக்களைத்தான் பெற முடிந்தது. கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் 69.9% வாக்குகளை இக்கட்சி பெற்றது.

எதிர்க்கட்சியான ஒர்க்கர்ஸ் பார்ட்டி, 10 இடங்களைப் பெற்றது. இதுவரை அக்கட்சி பெற்ற சிறந்த வெற்றி இதுதான். அக்கட்சியின் பிரித்தம் சிங் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்கிறார்.

கொரோனா வைரஸ் பரவலை அரசு எப்படி கையாண்டது என்பதற்கான மதிப்பெண் இத் தேர்தல் என கருதப்பட்டது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 45,000 க்கும் அதிகமான கொரோனா கேஸ்களுடன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாகும்.