முகக் கவசம் அணியாமல் பொது இடத்திற்கு சென்ற பிரதமருக்கு அபராதம்

பல்கேரியா நாட்டில் நேற்று முன் தினம் முகக் கவசம் அணியாமல் தேவாலயத்துக்கு வந்த பிரதமர் பாய்கோ போரிசோவுக்கு 13,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

உலக நாடுகளை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு கொரோனாவால் 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து அந்நாட்டு அரசு மேற்கொண்ட துரிதமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்தது. இதனால் இம்மாதம் முதல் அங்கு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த வாரம் 600க்கும் மேற்பட்ட வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதால் பொது வெளியில் செல்லும் மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அந்நாடு சுகாதரத்துறை உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே தலைநகர் சோஃபியாவிற்கு தெற்கே உள்ள ரிலா மலைகளில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிழக்கு ஆர்த்தடாக்ஸ் ரிலா தேவாலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயம் அதன் வண்ணமயமான ஓவியங்களுக்கு புகழ் பெற்றது, மேலும் பல்கேரியாவின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இந்த தேவாலயம் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த தேவாலயத்துக்கு அந்நாட்டின் பிரதமர் பாய்கோ போரிசோ வருகை தந்திருந்தார். அவர் வருகையின் போது அவர் உட்பட தேவாலயத்தில் இருந்த யாரும் முககவசம் அணியவில்லை என கூறப்படுகிறது.

இதனை கவனித்த அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம், தேவாலயத்தில் முகக் கவசம் அணியாத பிரதமர் உட்பட அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணியாத பிரதமருக்கு 300 லெவ் அதாவது இந்திய மதிப்பில் 13,000 ரூபாய் அபராதம் விதித்திக்கப்பட்டுள்ளது. ஆனால் தேவாலயத்திற்குள் முகக்கவசம் அணியத் தவறிய மதகுருக்களுக்கும் அபராதம் விதிக்கப்படுமா என சுகாதாரத்துறை கூறவில்லை.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை பின்பற்றாத பிரதமருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.