புதுக்கோட்டை அருகே ஊரடங்கில் வருமானம் இழந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். ஆனால், அங்கு போதிய வருமானம் கிடைக்காததால் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் கையில் இருந்த பணத்தை கொண்டு தவணை மூலமாக ஆட்டோ ஒன்றை வாங்கி ஒட்டி வந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் தற்போது ஆட்டோ ஓட்ட முடியாமல் இருந்த சுப்பிரமணி பெரும் பண நெருக்கடியில் இருந்துள்ளார். இந்நிலையில், பிள்ளைகளின் படிப்பிற்காக அவர் வாங்கிய கடனை கட்டக்கோரி பணம் கொடுத்தவர்கள் சுப்பிரமணிக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் நாள்தோறும் மன விரக்தியில் இருந்து வந்த சுப்பிரமணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் பிணமாக கிடந்த அவரை சக ஆட்டோ ஓட்டுனர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சுப்பிரமணி ஏற்கெனவே இறந்துவிட்டதாக அங்கு தெரிவித்துள்ளனர்.
கூடவே இருந்த நண்பர் வறுமையின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.