ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை பெங்களூரில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு NIA (என்ஐஏ) சனிக்கிழமையன்று கைது செய்தது. அவர்களை கைது செய்த பின்னர், ஸ்வப்னா சுரேஷின் குடும்ப உறுப்பினர்களையும் என்.ஐ.ஏ தனது காவலில் எடுத்தது. அவர்கள் அனைவரும் நேற்று கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) தூதரக பொது அலுவலகத்தின் விலாசம் குறிக்கப்பட்ட ஒரு பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாகவும், இது தொடர்பாக துப்பு கிடைத்ததை அடுத்து சர்வதேச விமான நிலையத்தில் சுங்க துறை அதிகாரிகள் குற்றச்செயலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர்.

அந்த பார்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை ஜூலை 5ஆம் தேதி பறிமுதல் செய்தது.

இந்த விவகாரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) துணைத் தூதரக அலுவலகத்தின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், வளைகுடா நாடுகளில் இருந்து தங்கம் கடத்துவதற்காக தூதரக அதிகாரிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதறாக ஆவணங்களை உருவாக்கியிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

தங்க கடத்தல் சம்பவம் தொடர்பாக IT செயலர் பதவியில் இருந்து IAS அதிகாரி M.சிவசங்கர் நீக்கப்பட்டுள்ளார். தங்க கடத்தல் வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரான ஸ்வப்னா சுரேஷுக்கும் கேரள முதலமைச்சரின் அலுவலகத்திற்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியதை அடுத்து, முதல்வருக்கான தலைமை செயலாளர் பதவியில் இருந்தும் M.சிவசங்கர் நீக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்களான சரித் குமார், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) என்.ஐ.ஏ வெள்ளிக்கிழமை பதிவு செய்தது.