கொரோனாவில் இறந்த முதியவர் உடலை ஜெ.சி.பி.யில் எடுத்துச்சென்ற கொடூரம்

மராவதி: ஆந்திராவில் கொரோனாவில் இறந்த 72 வயது முதியவரின் உடலை புதைக்க ஜெ.சி.பி. இயந்திரத்தில் மயானத்திற்கு கொண்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள 72 வயது ஒய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடல் உதயபுரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் மயானத்திற்கு கொண்டு செல்ல யாரும் முன்வராத நிலையில் மாநகராட்சியினர் ஜெ.சி.பி. எனப்படும் மண் அள்ளும் இயந்திரம் மூலம் உடலை கொண்டு சென்றனர்.

இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சம்பவம் அறிந்த ஸ்ரீகாகுளம் கலெக்டர் , மாநகராட்சி கமிஷனர், மற்றும் சுகாதார அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனாவில் இறந்த ஒருவர் உடலை டிராக்டரில் மயானத்திற்கு கொண்டு சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது.