
ஹோர்முஸ் ஜலசந்தியை நெரிக்கும் ஈரானிய சிறு படகுகளைச் சுட்டுக் கொல்லுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இன்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில், ஹோர்முஸ் ஜலசந்தியின் நீரில் கண்ணிவெடிகளைப் புதைக்கும் எந்தவொரு படகையும் சுட்டுக் கொல்லுமாறு அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக திரு. டிரம்ப் கூறினார். இந்த முக்கிய நீர்வழியில் கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகளை இராணுவம் தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
ஈரானுடன் தொடர்புடைய மற்றொரு எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. இது, முக்கிய ஜலசந்தியில் ஈரானின் துணை இராணுவப் படையான புரட்சிகரக் காவலர்கள் இரண்டு கப்பல்களைக் கைப்பற்றிய ஒரு நாள் கழித்து, ஈரானுடனான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் கைப்பற்றப்பட்ட, கயானா கொடி ஏற்றப்பட்ட ‘மெஜஸ்டிக் எக்ஸ்’ என்ற எண்ணெய்க் கப்பலின் தளத்தில் அமெரிக்கப் படைகள் இருக்கும் காணொளிக் காட்சிகளை பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. அது சீனாவின் ஷௌஷான் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. சட்டவிரோத வலையமைப்புகளைச் சீர்குலைக்கவும், ஈரானுக்குப் பொருள்சார் ஆதரவை வழங்கும் கப்பல்கள் செயல்படும் இடங்களிலெல்லாம் அவற்றை இடைமறிக்கவும் உலகளாவிய கடல்சார் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடரப்போவதாக அமெரிக்கா அறிக்கை ஒன்று தெரிவித்தது. இந்தக் கைப்பற்றல் செய்தி குறித்து ஈரானிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை. அந்த ஜலசந்தியில் மூன்று சரக்குக் கப்பல்களை ஈரான் தாக்கி, அவற்றில் இரண்டைக் கைப்பற்றிய ஒரு நாள் கழித்து இந்தக் கைப்பற்றல் நிகழ்ந்துள்ளது. செவ்வாயன்று, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையைத் தொடர்ந்தவாறே, போர் நிறுத்தத்தை நீட்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
