
காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான நீண்டகால பிரச்சினையை முன்னிறுத்தி, கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா நோக்கிச் செல்லும் அரசு பேருந்துகள் ஓசூர் எல்லைப் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் மாற்று போக்குவரத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனுடன், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை அமைக்கும் திட்டத்தை கர்நாடக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் நீர்வள உரிமையை பாதிக்கும் எனக் கூறி தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தமிழக விவசாய சங்கங்களும் பல்வேறு கட்டங்களில் போராட்டங்களை நடத்தி, மேகதாது அணைத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்தச் சூழலில், காவிரி விவகாரத்தை மையமாகக் கொண்டு கர்நாடகாவின் எல்லைப் பகுதிகளில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா நோக்கிச் செல்லும் அரசு பேருந்துகள் ஓசூர் எல்லைப் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இருப்பினும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வரும் அரசு பேருந்துகள் வழக்கம்போல எந்தத் தடையும் இன்றி இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், கார், லாரி உள்ளிட்ட தனியார் மற்றும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் வழக்கமான முறையில் நடைபெற்று வருகிறது.
கர்நாடகா செல்ல வேண்டிய பயணிகள், ஓசூரிலிருந்து தமிழக மாநில எல்லை வரை இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் பயணம் செய்து, அங்கிருந்து ஆட்டோ ரிக்ஷா மூலம் அத்திப்பள்ளி சென்ற பின்னர், அங்கிருந்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். இதனால் பயண நேரமும், செலவும் அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தமிழக–கர்நாடக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க இரு மாநில காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஓசூர் மற்றும் அத்திப்பள்ளி எல்லைப் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, வாகனங்கள் மற்றும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
