
சுமார் 454 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பத்து லட்சம் அணு குண்டுகளின் ஆற்றலுடன் வெடித்த ஒரு எரிமலை, இங்கிலாந்தின் ஆழமான பகுதிக்கு அடியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ‘சூப்பர் எரிமலை’ (supervolcano) இங்கிலாந்தின் கிழக்குக் கடற்கரைக்கு அடியில் புதைந்துள்ளதாகவும், அதன் மையம் ‘தி வாஷ்’ (The Wash) பகுதிக்கு நேர் கீழே அமைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 64 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த எரிமலை, பல நாடுகளில் காணப்படும் எரிமலைச் சாம்பல் படிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்தச் சாம்பல் படிவு போலந்து, பெலாரஸ் மற்றும் ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது. இது மீண்டும் வெடிக்கக்கூடுமா?
நார்போல்க்கில் உள்ள நார்த் கிரீக் (North Creake) மற்றும் லிங்கன்ஷயரில் உள்ள கிளாக்ஸ்பி (Claxby) ஆகிய இடங்களிலிருந்து 80 ஆண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட பாறை மாதிரிகளைப் புதிதாக ஆய்வு செய்ததன் மூலம் இந்தத் தகவல் கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு “இங்கிலாந்தின் ஆழமான புவியியல் கடந்த காலம்” குறித்த மனிதர்களின் புரிதலை மாற்றியமைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் எரிமலை ஆய்வாளர் பேராசிரியர் ஜென்னி பார்க்லே, “ஐக்கிய இராச்சியத்தின் புவியியல் வரலாற்றை ஒன்றிணைப்பதில் இந்த ஆய்வு ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்” என்று கூறினார்.
எரிமலை வெடிப்புக்கு முன் உருகிய மாக்மாவில் (magma) உருவான, மனித முடியின் அகலத்திலான படிகங்களும் (crystals) இதில் அடங்கும். ஆய்வின்போது, நார்போல்க் மற்றும் லிங்கன்ஷயரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஒரே எரிமலையிலிருந்து வந்தவை என்பதையும், அவை ஒரே நேரத்தில் உருவானவை என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இந்த எரிமலை வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது; அதற்கான ஆதாரம் நார்வேயில் கண்டறியப்பட்டது. நார்வே மற்றும் ஸ்வீடனில் சேகரிக்கப்பட்டு, ஆஸ்லோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளைப் போலவே இவையும் இருந்தன. இதன் மூலம், இந்த எரிமலையிலிருந்து வெளியேறிய பொருட்கள் தற்போதைய ஸ்காண்டிநேவிய நாடுகள் உட்படப் பரந்த பகுதிக்கு பரவியிருந்தது தெரியவந்தது.
இந்தக் கண்டுபிடிப்பு சாமானிய மக்களிடையே இயல்பான கவலைகளை ஏற்படுத்துகிறது. இது மீண்டும் வெடித்தால் என்ன செய்வது? அத்தகைய அச்சங்களைப் போக்கும் வகையில், இந்த எரிமலை செயலற்ற நிலையை அடைந்துவிட்டதாகவும் (extinct), இனி ஒருபோதும் வெடிக்காது என்றும் விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர்.
பிரிட்டிஷ் புவியியல் ஆய்வகத்தின் (BGS) டாக்டர் டிம் ஃபாரோ, “நில அதிர்வு ரீதியாக மீண்டும் செயல்படக்கூடிய புவிப்பிளவுகளைப் (faults) போலல்லாமல், எரிமலைகள் மீண்டும் செயல்படாது” என்று கூறினார். மேலும் அவர், “அது ஒருமுறை செயலற்ற நிலையை அடைந்துவிட்டால், அவ்வளவுதான். அந்தச் சூப்பர் எரிமலை மீண்டும் வெடிக்கும் என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை” என்று குறிப்பிட்டார்.
