இந்திய தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். ஹுசைன், 73, இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸால் என்ற ஒரு அரிய நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக அவரது குடும்பதினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் ICU க்கு மாற்றப்பட்டார்.
ஹுசைனின் சகோதரி குர்ஷித் ஆலியா கூறுகையில், “சான் பிரான்சிஸ்கோ நேரப்படி மாலை 4 மணி அளவில் வென்டிலேஷன் இயந்திரம் அணைக்கப்பட்ட பிறகு அவர் மிகவும் நிம்மதியான முறையில் காலமானார்”. ஹுசைனுக்கு அவரது மனைவி அன்டோனியா மின்னெகோலா மற்றும் அவரது மகள்களான அனிசா குரேஷி மற்றும் இசபெல்லா குரேஷி ஆகியோர் உள்ளனர்.
ஜாகிர் உசேன் 9 மார்ச் 1951 இல் பிறந்தார், ஜாகிர் உசேன் புகழ்பெற்ற தபேலா மாஸ்டர் “உஸ்தாத் அல்லா ரக்காவின்” மகனாவார். சிறந்த தபேலா கலைஞராகக் கருதப்படும் ஜாகிர் ஹுசைனின் புகழ்பெற்ற வாழ்க்கை ஆறு தசாப்தங்களாக நீடித்தது மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 66 வது கிராமி விருதுகளில் மூன்று விருதுகள் உட்பட நான்கு கிராமிய விருதுகள் பெற்றவர். மேலும் அவர் பத்மஸ்ரீ (1988), பத்ம பூஷன் (2002), மற்றும் பத்ம விபூஷன் (2023) ஆகிய நமது பாரத விருதுகளையும் பெற்றவர் ஆவார்.
“பொன் புதுயுகம்” சார்பாக அவர் எங்களுக்கு வழங்கிய அனைத்து இசைக்கும் நன்றி தெரிவிப்பதுடன், அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.