
உக்ரைனிலிருந்து ரஷ்யா தனது படைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் 2014 ஆம் ஆண்டு தொடங்கி நீடித்து வருகிறது. 2022 பிப்ரவரி 24ஆம் தேதி, ரஷ்யா உக்ரைன் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடங்கியது. மூன்றாண்டுகளாக இந்த போர் தொடர்ந்து வரும் நிலையில், கடந்த நாளோடு மூன்றாவது ஆண்டு நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, உலகத் தலைவர்கள் பலர் உக்ரைன் தலைநகர் கீவ்வில் திரண்டனர்.
இந்த போருக்கு முடிவுகட்ட, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள முயற்சிகளுக்கு பதிலாக, ஐரோப்பிய ஒன்றியம் தனது அணுகுமுறையை மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக, பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸல்சில் மார்ச் 6ஆம் தேதி அவசர மாநாடு நடைபெறவுள்ளது. இதில், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 27 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று ஐரோப்பிய கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஐ.நா. பொதுச்சபையில், ரஷ்ய படைகள் உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என்பதோடு, போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் இந்த மோதலை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு 93 நாடுகள் ஆதரவாகவும், ரஷ்யா, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. அதேசமயம், இந்தியா உட்பட 63 நாடுகள் வாக்களிக்காமல் இருந்தன. பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.