Thursday, September 17பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

4 அரபு நாடுகள் அமெரிக்க போர் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளன!

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் முன்னேறிவரும் அமெரிக்காவுக்கு எதிராக, முக்கியமான நான்கு அரபு நாடுகள் தங்களின் வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம், அமெரிக்காவின் இராணுவ திட்டங்களுக்கு பெரும் தடையாக அரபு நாடுகள் களமிறங்கியுள்ளன.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்டகாலமாக நிலவிவந்த பதற்றம், கடந்த சில மாதங்களில் தீவிரமான மாற்றங்களை சந்தித்துள்ளது. தற்போது, ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் அமெரிக்க விமானங்கள் மற்றும் ராணுவத்தினர் பல நாடுகளிலுள்ள தளங்களில் தயார் நிலையில் இருக்கின்றனர். இதற்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக ஈரான் ஏற்கனவே பல்வேறு வகையான ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் ஆகிய நான்கு அரபு நாடுகள் தங்கள் வான்வெளியில் அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் உளவு விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடைத் தீர்மானம், இரண்டு நாட்கள் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. எனினும், அந்த நாடுகளின் முடிவுகள் சூழ்நிலைப் பொருத்தமாக நீட்டிக்கப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகள் இந்த முடிவை எடுப்பதற்கான முக்கிய காரணம், அவர்கள் மத்திய கிழக்கில் மேலும் எந்தவொரு போரையும் விரும்பவில்லை என்பதே. ஏற்கனவே, அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல்–காசா இடையே நடைபெறும் போர் பல உயிரிழப்புகளையும், மனிதாபிமான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அது போன்ற ஒரு பேரழிவை ஈரானிலும் ஏற்பட விடக் கூடாது என்பதற்காகவே, அரபு நாடுகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. இந்த தடை விமானப் போக்குவரத்துக்கு மட்டுமல்ல, எரிபொருள் நிரப்பு, மீட்பு நடவடிக்கைகள், உளவுத்துறை கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் எனக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் அமெரிக்க அதிகாரிகள், சவூதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளுடன் இராணுவ உபகரணங்கள் தொடர்பான சந்திப்பு நடத்தினர். கத்தாருக்கு MQ-9 ரீப்பர் ட்ரோன்கள், சவூதிக்கு ராக்கெட் மேம்படுத்தும் ஒப்பந்தங்கள் ஆகியவை அதில் அடங்கும். இந்த இராணுவ ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆதரவை இந்த நாடுகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழ்நிலையின் பின்னணியில், அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் நவீன பாதுகாப்பு உபகரணங்கள் விற்பனை மற்றும் ஆதரவை பெறும் நோக்கத்தில், பன்னிரண்டு அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரபு நாடுகள் எடுத்துள்ள புதிய தீர்மானம், இம்மோதலை தவிர்க்கும் வாய்ப்பாக அமையுமா அல்லது இன்னும் அதிக ஆபத்தான பாதையை நோக்கி இட்டுச் செலுமா என்பதற்கான விடை வரும் நாட்களில் தெரியவந்துவிடும்.