
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து இந்திய தலைமைத் தணிக்கையாளர் (CAG) கவலைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ள நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பல்வேறு உடனடி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் விநியோக இயந்திரங்கள் உள்ளிட்ட சுமார் 20,000 இடங்களில் ‘டேங்க் டு டேப்’ (Tank to Tap) என்ற முறையிலான புதிய நீர் சுத்திகரிப்பு மற்றும் வடிகட்டுதல் அமைப்புகள் நிறுவப்பட உள்ளன. குடிநீரின் தரத்தை மேம்படுத்துவதுடன், நீர் மாசுபடுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடிநீரில் ஈ.கோலி பாக்டீரியா:
இந்திய ரயில்வேயின் புறநகர் அல்லாத ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகள் மற்றும் சுகாதாரம் தொடர்பாக CAG மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. தணிக்கையின்போது ’49 ரயில் நிலையங்களில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில்’, 8 நிலையங்களில் இருந்து பெறப்பட்ட குழாய் நீரில் ‘ஈ.கோலி (E. coli) பாக்டீரியா’ இருப்பது கண்டறியப்பட்டதாக CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈ.கோலி பாக்டீரியா கண்டறியப்பட்ட ரயில் நிலையங்களில் தமிழகத்தின் கோவை ரயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது. இதுதவிர, பாலக்காடு, ஹைதராபாத், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம், பிவாண்டி ரோடு, கல்யாண், லோனாவாலா மற்றும் மதுபூர் ஆகிய ரயில் நிலையங்களிலும் குடிநீர் மாதிரிகளில் இந்த பாக்டீரியா கண்டறியப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈ.கோலி இருப்பது எதற்கான அறிகுறி?
குடிநீரில் ஈ.கோலி பாக்டீரியா இருப்பது சாதாரணமான விஷயம் அல்ல என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக மனிதர்கள் அல்லது விலங்குகளின் கழிவுகள் மற்றும் கழிவுநீர் குடிநீரில் கலந்திருப்பதற்கான முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக ஈ.கோலி பாக்டீரியா இருப்பது கருதப்படுகிறது. எனவே, குடிநீர் விநியோக அமைப்புகள், சேமிப்புத் தொட்டிகள், குழாய்கள் மற்றும் விநியோகப் புள்ளிகளில் முறையான பராமரிப்பு மற்றும் தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ரயில்வே வாரிய அளவில் கண்காணிப்பு:
இனிமேல் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் குடிநீரின் தரம் ரயில்வே வாரிய அளவில் நேரடியாக கண்காணிக்கப்படும் என மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குடிநீரின் தரம் தொடர்பான அறிக்கைகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் தரம் தொடர்பான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் முயற்சி மேற்கொள்கிறது.
பயணிகளின் புகார்கள் அதிகரிப்பு:
ரயில் நிலையங்களில் சுகாதாரம், குடிநீர், மருத்துவ உதவி மற்றும் மின்சார வசதிகள் தொடர்பாக பயணிகளிடமிருந்து அதிகமான புகார்கள் பெறப்படுவதாகவும் CAG தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பயணிகள் அளிக்கும் புகார்களுக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்படாததால், பயணிகளிடையே அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் தேசியத் தணிக்கை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ரயில் நிலையங்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க கணிசமான அளவில் நிதி செலவிடப்பட்டாலும், அதன் பலன் அனைத்து நிலையங்களிலும் முழுமையாக வெளிப்படவில்லை என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
CAG அறிக்கைக்குப் பிறகு ரயில்வேயின் நடவடிக்கை:
ரயில் நிலையங்களில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பாக CAG சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில், ரயில்வே அமைச்சகம் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 20,000 இடங்களில் புதிய நீர் சுத்திகரிப்பு மற்றும் வடிகட்டுதல் அமைப்புகளை நிறுவுவது, வழக்கமான நீர் பரிசோதனைகளை மேற்கொள்வது, சேமிப்புத் தொட்டிகளை திட்டமிட்டு சுத்தம் செய்வது மற்றும் குடிநீரின் தரத்தை ரயில்வே வாரிய அளவில் கண்காணிப்பது ஆகியவை முக்கிய நடவடிக்கைகளாக உள்ளன.
பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், குடிநீரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான இந்த நடவடிக்கைகள் விரைவாக நடைமுறைக்கு வந்தால், நாடு முழுவதும் ரயில் பயணிகளுக்கான சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
