
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தன்னையும், மற்றொரு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) எம்.எல்.ஏ.வையும் அணுகி, கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் விரும்பிய அமைச்சர் பதவி வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா பகிரங்கமாக தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஃபாருக் பாஷா, தேர்தலுக்குப் பின்னர் தன்னையும், ஷாஜகானையும் சிலர் நேரில் சந்தித்து பேரம் பேச முயன்றதாக கூறினார். அப்போது, “கோடி கோடியாக பணத்தை பெட்டிகளில் கொண்டு வந்து கொடுத்து, உங்களுக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டும்? கையெழுத்து போடுங்கள்” எனக் கேட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பணத்துடன் வந்தவர்கள் பல்வேறு அமைச்சர் பதவிகளையும் வழங்குவதாகக் கூறியதாகவும் ஃபாருக் பாஷா தெரிவித்தார். குறிப்பாக, உள்ளாட்சித் துறையா அல்லது போக்குவரத்துத் துறையா என விரும்பிய துறையைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று அவர்கள் கூறியதாக அவர் பேசியுள்ளார்.
தங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் மற்றும் பதவி ஆசைக்கு தாங்கள் அடிபணியவில்லை என்றும், கட்சியின் கொள்கைக்காக அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் ஃபாருக் பாஷா தெரிவித்துள்ளார். “நாங்கள் கோடிக்குச் சாய்ந்தவர்கள் அல்ல; கொள்கைக்குச் சார்ந்தவர்கள். எங்களுடைய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். கொள்கையோடுதான் இருப்போம் என்று சொல்லி அவர்களை விரட்டி விட்டோம்” என அவர் கூறினார். மேலும், “அல்லாஹ்தான் எங்களுக்கு பதவியை வழங்கக்கூடியவர். பதவிக்காக எங்களுடைய கொள்கையை விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை” என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தாங்கள் அந்த பேரத்தை ஏற்க மறுத்த நிலையில், ஷாஜகானை அழைத்து அமைச்சர் பதவி வழங்கியதாகவும் ஃபாருக் பாஷா தனது உரையில் தெரிவித்துள்ளார்.மேலும், கட்சித் தலைவர் தரப்பிலும் அமைச்சரவைப் பதவி தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஃபாருக் பாஷாவின் இந்தப் பேச்சு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை அணுகி பணம், அமைச்சர் பதவி உள்ளிட்ட சலுகைகளை வழங்கி ஆதரவைப் பெற முயற்சிக்கப்பட்டதாக அவர் கூறியிருப்பது, தமிழக அரசியலில் மீண்டும் ‘குதிரை பேரம்’ குறித்த சர்ச்சையை எழுப்பியுள்ளது.
எனினும், ஃபாருக் பாஷா கூறியுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் குறிப்பிட்ட நபர்கள் அல்லது தரப்புகளின் பெயர்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளின் விளக்கம் வெளியாகும் பட்சத்தில், இந்த விவகாரம் மேலும் அரசியல் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
