
காவிரி நீர்ப்பங்கீட்டு விவகாரத்தில் மாதாந்திர நீர்ப்பங்கீட்டு முறைக்கு பதிலாக தினசரி அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான சட்டப்பூர்வ தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும், நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கள் இறக்குவதற்கான தடையை நீக்காவிட்டால், வரும் ஜனவரி 21-ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் செப்டம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் செயலர் செ.நல்லசாமி கூறியதாவது: காவிரி நீர்ப்பங்கீட்டு பிரச்சினையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் சட்டப் போராட்டம் 28 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும், கர்நாடக அரசு அவற்றை முறையாக கடைப்பிடிப்பதில்லை. கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பிய நிலையிலும் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறந்துவிடப்படாத நிலை தொடர்கிறது. காவிரியில் தினசரி நீர்ப்பங்கீட்டை அடிப்படையாகக் கொண்டு சட்டப் போராட்டம் நடத்தி தீர்வு பெற்றிருந்தால், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டிருக்கும். அதன்மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான உறவும் மேம்பட்டிருக்கும். 2017-ஆம் ஆண்டு காவிரி தொடர்பான இறுதித் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள மாதாந்திர நீர்ப்பங்கீட்டு முறைதான் தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக கர்நாடக அணைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைகள் நிரம்பி உபரி நீரை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்படும் போது மட்டுமே தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் வருகிறது. குறுகிய காலத்திற்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் நிலையில் சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள தீர்ப்பின்படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரைக்கூட முழுமையாகப் பெற முடியவில்லை. எனவே, காவிரி நீர்ப்பங்கீட்டில் மாதாந்திர முறையை கைவிட்டு, தினசரி நீர்ப்பங்கீட்டு முறையை சட்டப்பூர்வமாக அமல்படுத்துவதே நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமை எனக் குறிப்பிட்ட நல்லசாமி, பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பதநீர், நீராபானம் மற்றும் கள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார். கள்ளில் கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால், அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரத்தில், கள்ளை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்க முடியும். எனவே, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கள் மீதான தடையை நீக்கி, கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 21-ஆம் தேதி மிகப்பெரிய கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காவிரி நீர் பிரச்சினை மற்றும் கள் இறக்குவதற்கான அனுமதி ஆகிய இரு முக்கிய கோரிக்கைகளையும் முன்னிறுத்தி, திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் கொள்கை வேட்பாளரை நிறுத்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாகவும் நல்லசாமி தெரிவித்தார். விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்தி, அந்த வேட்பாளரைத் தேர்வு செய்ய உள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, திருச்சி சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர் கிராமத்துக்கு உட்பட்ட மேலப்பேட்டையில், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் மா.ப. சின்னத்துரைக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கள் இறக்கி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் மா.ப. சின்னத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பெறப்படும் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும், கள் மீதான தடையை நீக்கி தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு பனையேறும் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காவிரி நீர்ப்பங்கீடு மற்றும் கள் இறக்குவதற்கான அனுமதி ஆகிய இரு கோரிக்கைகளையும் முன்வைத்து விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருவது தமிழக அரசியல் மற்றும் விவசாயிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
