
இந்தியா-ஜப்பான் இடையிலான கூட்டாண்மையின் ஆழம் மற்றும் அதன் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவில் தங்கள் முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்துமாறு ஜப்பானிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
புது தில்லியில் ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவினரிடையே பேசிய திரு. கோயல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றுக்கான பொதுவான நோக்கங்களின் அடிப்படையில் இந்தியா மற்றும் ஜப்பான் இடையே நெருக்கமான மற்றும் நீண்டகால கூட்டாண்மை நிலவுவதாகக் குறிப்பிட்டார். யமனஷி (Yamanashi) மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவின் வருகையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு விரிவடைந்து வருவதை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
2025-26 நிதியாண்டில் இந்தியா-ஜப்பான் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 27.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாகவும், தற்போது இந்தியாவின் ஐந்தாவது பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டு (FDI) ஆதார நாடாக ஜப்பான் திகழ்வதாகவும் திரு. கோயல் தெரிவித்தார்.
மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம், தில்லி, அகமதாபாத், பெங்களூரு மற்றும் சென்னையில் ஜப்பானின் உதவியுடன் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் எட்டு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 11 ஜப்பானிய தொழில் நகரங்கள் ஆகியவற்றை உதாரணமாகக் குறிப்பிட்ட அமைச்சர், இந்தியா-ஜப்பான் இடையிலான வளர்ந்து வரும் கூட்டாண்மையின் பலன்கள் ஏற்கனவே களத்தில் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
