
துருக்கியின் மத்திய தரைக்கடல் பகுதியில் இன்று (ஜூன் 3) ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மர்மாரிஸ் என்ற கடலோர நகரத்தில் மையமாகக் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தை துருக்கியின் பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்துக்கான மையம் மத்திய தரைக்கடலிலேயே இருந்ததால், அதற்கான அதிர்வுகள் கிரீஸின் ரோட்ஸ் தீவுகள் உள்ளிட்ட அண்டை பகுதிகளிலும் உணரப்பட்டது. நில அதிர்வினால் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
சில வீடுகளின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் இந்த நிலநடுக்க தருணத்தை பதிவு செய்துள்ளன. அந்தக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.
நிலநடுக்கம் நிகழ்ந்த சமயம் தூங்கிக் கொண்டிருந்த பலர் பயத்தில் ஜன்னல்கள் வழியாகவும், பால்கனிகளிலிருந்து குதித்தும் தப்ப முயன்றனர். இதனால் 7 பேர் காயமடைந்துள்ளனர். மற்ற பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்க அதிர்வுகள் எகிப்து மற்றும் சிரியா வரை உணரப்பட்டது. 2023ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான மிக பெரிய நிலநடுக்கத்தில் 53,000 பேர் உயிரிழந்தார்கள் என்ற சோகம் இன்னும் மாறாத நிலையில் இந்த 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.