Tuesday, May 12பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 2,000 குடும்பங்கள் பாதிப்பு.

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 2,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசரத் தேவைகளை மனிதாபிமானக் குழுக்கள் தொடர்ந்து மதிப்பிட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பன்னாட்டுப் புலம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.

நங்கர்ஹாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகப் பலர் தங்கள் வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு உடைமைகளை இழந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்பாளர்களுக்கும் உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ள லக்மான் மற்றும் குனார் ஆகிய மாகாணங்களிலும் இதேபோன்ற நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக IOM குறிப்பிட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு, கடும் குளிர்காலம் மற்றும் வறட்சி உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் அண்மைய ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானைப் பெரிதும் பாதித்துள்ளதாகவும்; ஏற்கனவே வறுமை மற்றும் இடப்பெயர்ச்சியால் அவதிப்படும் இலட்சக்கணக்கான மக்களின் மீது இது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கனமழை, திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் நிலநடுக்கங்கள் காரணமாக, குறைந்தது 148 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 216 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தானின் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.