Wednesday, February 5பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இடி, மின்னலுடன் கூடிய மழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகுந்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது, இதன் விளைவாக மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டுகிறது. இந்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நகர்ந்து வருகின்றது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (19.12.2024) வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோர பகுதிகளை நோக்கிச் செல்லக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (18.12.2024) வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது. அதேபோல், வட கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.