Saturday, January 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

சைபர் அடிமைகளாக இருக்கும் தமிழர்கள்: சிறப்பு அறிக்கை!

தென் தமிழகத்தில் கணினி துறையில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பெரும்பாலும் வெளிநாடு சென்று வேலை செய்வதையே விரும்புகின்றனர். இவர்களை குறி வைத்து தூக்கும் கம்போடியா மற்றும் லாவோஸ் நாட்டில் உள்ள இணைய குற்றவாளி கும்பல்.

கணினி வேலை, கை நிறைய சம்பளம் என்று கூறி பல இளைஞர்களை கம்போடியா நாட்டிற்கு அழைத்துச் சென்று ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் அடிமைகளாக மாற்றி வருகின்றனர். வங்கி அதிகாரிகள் போல எப்படி பேச வேண்டும்; பங்கு சந்தை முதலீடுகளை ஈர்ப்பது போல, வாட்ஸாப்பில் எப்படி தகவல் அனுப்ப வேண்டும்; சிக்கிய நபர்களை சிந்திக்க விடாமல் எப்படி மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்பது குறித்து, அவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்கின்றனர்.

பாஸ்ப்போர்ட்டை பறித்து வைத்துக் கொண்டு பணி அமர்த்தப்படும் இந்த இளைஞர்கள் வேலை செய்ய மறுத்தால் பட்டினி போட்டும், உடலில் மின்சாரம் பாய செய்தும் சித்ரவதை செய்கின்றனர். சைபர் அடிமைகளாக மாற்றப்பட்ட இவர்கள் தினமும், 500 பேரிடமாவது பேசி, பண மோசடி செய்ய வேண்டும். தவறினால், அவர்களின் சம்பளத்தில் இருந்து, 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

பங்குச்சந்தை முதலீடு ஆசை காட்டி, சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரிடம், 1.66 கோடி ரூபாய் மோசடி செய்த, திருப்பூரைச் சேர்ந்த அபுதாஹீர், 43, கேசவராஜ், 41, கலீல் அகமது, 43, சென்னையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், 35, ஆகியோரை, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.கம்போடியாவில் இருந்து இந்தியா வந்த உடனே கைது செய்யப்பட்ட கலீல் அகமது கம்போடியாவில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் சைபர் குற்றவாளிகளாக இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கம்போடியாவில் 5,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இணைய மோசடித் திட்டங்களை இயக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மியான்மரில் குறைந்தது 120,000 பேரும், கம்போடியாவில் 100,000 பேரும் இணைய மோசடித் திட்டங்களைச் செயல்படுத்த சைபர் அடிமைகளாக நிர்ப்பந்திக்கப்பட்டதாக ஆகஸ்ட் 2023 இல் ஒரு ஐநா அறிக்கை கூறுகிறது. கடந்த ஆறு மாதங்களில் 250 பேரை மீட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆந்திர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

பொன் புதுயுகம் குழு: நமது அரசாங்கம் இந்த சைபர் அடிமைகளாக சிக்கி இருக்கும் இளைஞர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.