Saturday, January 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு (Chennai Press Club) புதிதாக தேர்வாகியுள்ள நிர்வாகிகள் தமிழக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

1972ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், கடைசியாக 1999ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர், நீண்ட காலமாக தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதனால், மறைந்த எம்.யூ.ஜே மோகன் உள்ளிட்ட சிலர் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் கண்காணிப்பில் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.

25 ஆண்டுகளுக்கு பின்னர், பதிவுத்துறை சட்டத்தின் கீழ் சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இதில் நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி மோதிய நிலையில், மொத்த 1,502 வாக்குகளில் 1,371 வாக்குகள் பதிவாகின. அதில், நீதிக்கான கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெற்றது.

சுரேஷ் வேதநாயகம் தலைவராகவும், அசிப் பொதுச் செயலாளராகவும், மணிகண்டன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல், இணைச் செயலாளராக நெல்சன் சேவியர், துணைத் தலைவர்களாக மதன் மற்றும் சுந்தர பாரதி, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஸ்டாலின், விஜய கோபால் மற்றும் பழனி தேர்வுசெய்யப்பட்டனர். புதிய நிர்வாக குழுவினர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துகளை பெற்றனர்.