
தமிழகத்தில் பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்வதற்காக, NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு) நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) கடந்த அக்டோபர் மாதம் ஆணை பிறப்பித்திருந்தது.
இதற்கிடையில், வெங்காயத்தின் தரத்தை ஆய்வு செய்வதற்காக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதிக்குச் சென்றனர். அப்போது, தமிழகத்திற்கு அனுப்பப்பட வேண்டிய வெங்காயம் ஏற்கெனவே ஒரு நாள் முன்னதாகவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கு இருப்பில் வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, தரமான ‘A’ வகை வெங்காயத்துடன் அழுகிய மற்றும் நிராகரிக்கப்பட வேண்டிய தரத்திலான வெங்காயங்களும் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெங்காய மூட்டைகளை 31.10.2026 அன்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், மொத்த வெங்காயத்தில் 50.2 சதவீதம், நிர்ணயிக்கப்பட்ட 45 மில்லி மீட்டர் அளவுக்கும் குறைவாக இருந்தது தெரியவந்தது. மேலும், 20 முதல் 26 சதவீதம் வரை வெங்காயம் அழுகியிருந்ததுடன், முளைத்த மற்றும் பூஞ்சைத் தொற்று ஏற்பட்ட வெங்காயங்களும் அதிக அளவில் இருந்ததால் அவை பயன்படுத்த முடியாத கழிவுப் பொருட்களாகக் கண்டறியப்பட்டன.
தரமான பொருட்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்ற கொள்கையின் அடிப்படையில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தரமற்ற வெங்காயத்தை வாங்குவதற்கான கொள்முதல் ஆணையைத் தமிழக அரசு ரத்து செய்தது.
மேலும், இந்தக் கொள்முதல் நடவடிக்கைக்காக எந்தவித முன்பணமும் வழங்கப்படவில்லை. எனவே, 31.10.2026 அன்று கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டதால் அரசுக்கு எவ்வித நிதி இழப்பும் ஏற்படவில்லை என்று டி.என்.ஐ.ஐ.டி. தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது.
