Monday, September 7பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

பாரிஸில் உள்ள சுவாமிநாராயண் கோயில் கலாச்சார பிணைப்புகளை வலுப்படுத்தும்: பிரதமர் மோடி!

தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பருவநிலை நடவடிக்கை ஆகிய துறைகளில் இரு நாடுகளும் தங்கள் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தி வருவதால், இந்தியா-பிரான்ஸ் உறவுகள் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 6 அன்று தெரிவித்தார். பாரிஸில் உள்ள சுவாமிநாராயண் கோயிலின் காணொளி வழித் திறப்பு விழாவில் உரையாற்றிய மோடி, இந்தக் புதிய கோயில் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட வாய்ப்புகளின் நீடித்த அடையாளமாகத் திகழும் என்று கூறினார்.

“சமீப காலங்களில், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவுகள் புதிய உயரத்தை எட்டியுள்ளன. எனது நண்பரான அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து, இரு நாடுகளும் ஒரு சிறப்பு உலகளாவிய கூட்டாண்மையை உருவாக்கி வருகின்றன,” என்று அவர் கூறினார். இருதரப்பு ஒத்துழைப்பில் அதிகரித்து வரும் வேகத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், 2026-ஆம் ஆண்டு ‘இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டாக’ (Year of Innovation) கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்டார். “நாங்கள் 2026-ஐ இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டாகவும் கொண்டாடுகிறோம். இந்த கூட்டாண்மை மிகவும் சிறப்பானது, ஏனெனில் இது நமது நீண்டகால கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளின் உறுதியான அடித்தளத்தின் மீது அமைந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்திய மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிகள் குறித்த கலந்துரையாடல்கள் அதிகரித்து வருவதையும் மோடி சுட்டிக்காட்டினார்; இது இருதரப்பு உறவில் மற்றொரு வாய்ப்புக்கான களமாக அமைகிறது என்று அவர் விவரித்தார். மோதல்களின் போது பிரான்ஸில் இந்திய வீரர்கள் ஆற்றிய பங்களிப்பு மற்றும் தியாகம் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகளையும் அவர் நினைவு கூர்ந்தார். “சமஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்துவதில் பிரெஞ்சு அறிஞர்கள் ஆற்றிய முக்கிய பங்கை மொழி ஆர்வலர்கள் அறிவார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் குறித்த ரோமன் ரோலண்டின் எழுத்துக்கள் நமது சமூகங்களை நெருக்கமாக்கின,” என்று அவர் கூறினார்.

பல தசாப்தங்களாக இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே வளர்ந்துள்ள ஆன்மீக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளையும் பிரதமர் மேலும் எடுத்துரைத்தார். பாரிஸிலிருந்து புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு ‘தி மதர்’ (The Mother) மேற்கொண்ட பயணத்தைக் குறிப்பிட்ட அவர், அது இரு நாடுகளிலும் உள்ள பல தலைமுறை ஆன்மீகத் தேடல் கொண்டவர்களை ஊக்குவித்துள்ளது என்று கூறினார். ஸ்ரீல பிரபுபாத சுவாமியின் பிரான்ஸ் பயணம் மற்றும் இந்தியாவுக்கும் பிரெஞ்சு மக்களுக்கும் இடையிலான ஆன்மீகத் தொடர்புகளை வலுப்படுத்துவதில் இஸ்கான் (ISKCON) ஆற்றிய பங்களிப்பையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இரு சமூகங்களுக்கும் இடையே யோகா மற்றொரு முக்கியமான பாலமாக உருவெடுத்துள்ளது என்று கூறிய மோடி, சர்வதேச யோகா தினத்தின் போது ஈபிள் கோபுரம் போன்ற முக்கிய இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள் மற்றும் அங்கு எடுக்கப்படும் படங்கள் மூலம் பிரான்ஸில் யோகாவின் புகழ் வெளிப்படுவதாகக் குறிப்பிட்டார். புதிதாகத் திறக்கப்பட்ட இந்தக் கோயில், பிரான்ஸுடனான இந்தியாவின் கலாச்சார உறவில் மற்றொரு முக்கியமான அத்தியாயத்தைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார். “இன்று, யோகா நமது நாடுகளுக்கு இடையே மக்களுடனான தொடர்பை ஏற்படுத்தும் ஒரு பாலமாகவும் மாறியுள்ளது. சர்வதேச யோகா தினத்தின்போது ஈபிள் கோபுரத்திலிருந்து வெளியான காட்சிகள், பிரான்சில் யோகாவுக்கு உள்ள பெரும் வரவேற்பை வெளிப்படுத்துகின்றன,” என்று அவர் கூறினார்.

சுவாமிநாராயண் கோயிலை, இந்தியக் கைவினைத்திறனையும் பிரெஞ்சுப் பொறியியல் நுட்பத்தையும் இணைக்கும் ஒரு திட்டமாகப் பிரதமர் மோடி விவரித்தார். “இதற்கான பல கற்கள் இந்தியாவில் செதுக்கப்பட்டன; இதன் மூலம் இந்தியாவின் தொன்மையான கைவினைத்திறன், பிரான்சின் நவீனப் பொறியியல் நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் பாரம்பரிய அறிவும் கைவினைத்திறனும் பிரான்சின் நவீன நிபுணத்துவமும் இணையும்போது உருவாகும் சாத்தியக்கூறுகளை இந்தக் கோயிலின் கட்டுமானம் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த விழுமியங்கள் பிரான்ஸைத் தாண்டிச் சென்று, ஐரோப்பா முழுவதும் உள்ள சமூகங்களுக்குப் பயனளிக்கும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார். தனது பணிச் சூழல் அனுமதிக்கும்போது, ​​எதிர்காலத்தில் இந்த ஆலயத்திற்கு நேரில் வருகை தர விரும்புவதாகவும் அவர் கூறினார். “இப்போது, ​​இந்த அற்புதமான BAPS ஆலயத்தின் (BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தா) மூலம், நமது கலாச்சார உறவுகளில் மற்றொரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

சுவாமிநாராயண் ஆலயங்கள் மத முக்கியத்துவத்தைத் தாண்டி, சமூக சேவை மற்றும் சமூக நல முன்னெடுப்புகளின் மையங்களாகவும் திகழ்வதை பிரதமர் வலியுறுத்தினார். “பக்தியுடன் இணைந்து சேவையாற்றும் மையங்களாகவும் சுவாமிநாராயண் ஆலயங்கள் எப்போதும் செயல்பட்டு வந்துள்ளன. இந்த ஆலயமும் அதேபோல சேவைத் திட்டங்களுக்கான மையமாகத் திகழும் என்று நான் அறிகிறேன்,” என்று பிரதமர் கூறினார்.

உலகெங்கிலும் நிறுவப்பட்டுள்ள BAPS ஆலயங்கள், இந்தியாவின் தத்துவ மரபுகள் மற்றும் மனித விழுமியங்களை சர்வதேச சமூகங்களிடம் கொண்டு சேர்க்க உதவுகின்றன என்று மோடி கூறினார். “பிரான்ஸில் இன்று ஒரு அற்புதமான ஆலயம் தயாராக உள்ளது; இது பிரான்ஸின் பன்முகத்தன்மையை வளர்ப்பது மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான கலாச்சார உறவுகளுக்கும் புத்துயிர் அளிக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.