
புது தில்லியில் தவறான விவரக்குறிப்புகள் கொண்ட மற்றும் போலியான மருந்துகளைத் தயாரித்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான குற்றச் செயல்களைக் கண்டறிய தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய குற்றச் செயல்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும்போதெல்லாம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தில்லி காவல்துறை மற்றும் பிற அமலாக்க முகமைகளுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்தத் தொடர் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தில்லியில் உரிமம் பெறாத ஒரு இடத்திலிருந்து, தவறான விவரக்குறிப்புகள் கொண்ட மற்றும் தரமற்ற ரேபிஸ் (வெறிநாய்க்கடி) தடுப்பூசிகளை தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பறிமுதல் செய்தனர். கடந்த மாதம் 27-ஆம் தேதி அனுப்பப்பட்ட தகவல் ஒன்றின் மூலம், இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI), அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களிடமும் தங்கள் ஆய்வுக் குழுவினரை எச்சரிக்கையாக இருக்குமாறும், சம்பந்தப்பட்ட அந்தத் தவறான விவரக்குறிப்புகள் கொண்ட தடுப்பூசி தொகுப்பின் (batch) நகர்வு, விநியோகம் மற்றும் இருப்பு ஆகியவற்றின் மீது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
சம்பந்தப்பட்ட அந்தத் தடுப்பூசி தொகுப்பின் எந்தப் பகுதியும் வேறு எந்த நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்பதையும் DCGI உறுதிப்படுத்தியுள்ளது. மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் தடுப்பூசிகள் உரிமம் பெற்ற மருந்தகங்கள் மூலமாகவே விநியோகிக்கப்படுகின்றன. இச்சம்பவம் தொடர்பாக தில்லி காவல்துறையினர் மொத்தம் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.
