Friday, October 16பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் UPI மூலம் தங்கள் குடும்பத்தினருக்குப் இனி பணம் அனுப்பலாம்!

UPI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ‘PosTransfer’ சேவையின் வாயிலாக, கத்தார் மற்றும் இந்தியா இடையிலான பணப் பரிமாற்றச் சேவை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இச்சேவை, கத்தாரில் உள்ள வாடிக்கையாளர்கள் ‘கத்தார் போஸ்ட்’ (Qatar Post) மையங்கள் வழியாக இந்தியாவில் உள்ள UPI வசதி கொண்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் அனுப்ப வழிவகுக்கிறது.

எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத்திற்கு உடனடி, பாதுகாப்பான, வசதியான மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஒரு சேவையை இது வழங்குவதாகவும், குறிப்பாக கத்தாரில் வசிக்கும் பெருமளவிலான இந்தியர்களுக்கும் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் இது பெரிதும் பயனளிக்கும் என்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அஞ்சல் சேவை வலைப்பின்னல்களின் பரந்த கட்டமைப்பையும் இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பையும் ஒருங்கிணைப்பதன் மூலம், எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத்திற்கான திறமையான மற்றும் வசதியான ஒரு சேவையை இந்த முயற்சி வழங்குகிறது.

கத்தார் போஸ்ட், இந்தியா போஸ்ட், யுனிவர்சல் போஸ்டல் யூனியனின் இன்டர்கனெக்ஷன் பிளாட்ஃபார்ம் (UPU-IP) மற்றும் NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இச்சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான சர்வதேச நிதித் தொடர்பை வலுப்படுத்தும் வகையில், UPI அடிப்படையிலான கூடுதல் ‘PosTransfer’ வழித்தடங்களைச் செயல்படுத்த இந்தியா போஸ்ட் பிற நாடுகளின் அஞ்சல் சேவை நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.