
நிலையான விமான எரிபொருள் (SAF) கலக்கப்பட்ட விமான டர்பைன் எரிபொருளை (ATF), ‘ATF கட்டுப்பாட்டு ஆணையின்’ (விமான டர்பைன் எரிபொருள் (சந்தைப்படுத்தல் ஒழுங்குமுறை) ஆணை, 2001) வரம்பிற்குள் கொண்டுவரும் வகையில், அந்த ஆணையில் ஒரு திருத்தத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
SAF என்பது, வேதியியல் ரீதியாக ATF-ஐ ஒத்ததும், விமான என்ஜின்களுடன் முழுமையாகப் பொருந்தக்கூடியதுமான, சிறப்பாகச் பதப்படுத்தப்பட்ட விமானத் தரத்திலான ஹைட்ரோகார்பன்களைக் கொண்டது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. SAF ஆனது விமான எரிபொருளின் அடிப்படைத் தன்மை, பாதுகாப்பு அல்லது செயல்திறன் ஆகியவற்றில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
பயிர்கள், உயிரியல் எச்சங்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் போன்ற மாற்று மூலப்பொருட்களிலிருந்து பெறப்படும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிபொருளாக SAF-ஐ சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) அங்கீகரித்துள்ளது என்றும், இது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. SAF-இன் பயன்பாடு, இத்தகைய வெளியேற்ற ஈடுசெய்தல் தேவைகளைக் குறைக்க உதவும். SAF-க்கான உலகளாவிய தேவையை அங்கீகரிக்கும் வகையில், சர்வதேச விமானப் பயணங்களுக்கான ATF-இல் SAF-ஐக் கலப்பதற்கான இலக்குகளை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது; அதன்படி 2027-இல் ஒரு சதவீதம், 2028-இல் இரண்டு சதவீதம் மற்றும் 2030-இல் ஐந்து சதவீதம் என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. SAF-இன் உலகளாவிய விநியோகச் சங்கிலியுடன் இந்தியா தன்னை இணைத்துக்கொள்ளவும் இந்தத் திருத்தம் அவசியமாகிறது.
கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல், SAF போன்ற நிலையான எரிபொருட்களை ஊக்குவித்தல், உள்நாட்டு உற்பத்தித் திறன்களை வலுப்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் உலகளாவிய தூய எரிசக்திச் சூழலமைப்பில் நாட்டை ஒரு முக்கிய அங்கமாக நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பசுமை எரிபொருள் மாற்றத்தை நோக்கி இந்தியா உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
