
துருக்கியின் தெற்கு நகரமான கஹ்ராமன்மாராஷில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நடுநிலைப் பள்ளியின் இரண்டு வகுப்பறைகளுக்குள் நுழைந்த 14 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், குறைந்தது 13 பேர் காயமடைந்ததாக துருக்கியின் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்ட்சி உறுதிப்படுத்தியுள்ளார். காயமடைந்தவர்களில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மாணவனும் கொல்லப்பட்டான். இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை தெரியவரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தலைமை அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களில், நாட்டில் நடைபெறும் இரண்டாவது பள்ளி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
