
இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) நடந்த தற்கொலைக் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு குழு (ஐ.எஸ்) பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 31 பேர் உயிரிழந்ததுடன், 169-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2008-ஆம் ஆண்டு மேரியட் ஹோட்டல் குண்டுவெடிப்புக்குப் பிறகு பாகிஸ்தான் தலைநகரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். இந்த குண்டுவெடிப்பு, நகரின் புறநகர்ப் பகுதியான தர்லாய் பகுதியில் உள்ள இமாம் பர்கா கஸ்ர்-இ-கதீஜதுல் குப்ரா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நிகழ்ந்தது.
ஜிஹாதிகளின் தகவல்தொடர்புகளைக் கண்காணிக்கும் சைட் இன்டெலிஜென்ஸ் குழுமத்தின்படி, ஐ.எஸ். அமைப்பு தனது போராளிகளில் ஒருவர் தொழுகைக் கூட்டத்தை இலக்காகக் கொண்டு, வெடிகுண்டு நிரப்பப்பட்ட மேலங்கியை வெடிக்கச் செய்து, “அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளையும் காயங்களையும் ஏற்படுத்தியதாக”க் கூறியுள்ளது.
இஸ்லாமிய அரசு குழு (ஐ.எஸ்) இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்பதற்கு முன் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் இந்த நிகழ்வுக்கு இந்தியா தான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தான் தனது சமூக அமைப்பைப் பாதிக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், “தனது சொந்தப் பிரச்சனைகளுக்கு மற்றவர்கள் மீது பழி போடுகிறது” என்றும் கூறியுள்ளது.
“இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு கண்டிக்கத்தக்கது, மேலும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இந்தியா இரங்கல் தெரிவிக்கிறது. தனது சமூக அமைப்பைப் பாதிக்கும் பிரச்சனைகளைத் தீவிரமாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் தனது சொந்தப் பிரச்சனைகளுக்கு மற்றவர்கள் மீது பழிபோட்டு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது துரதிர்ஷ்டவசமானது. ஆதாரமற்றதும் பயனற்றதுமான இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இந்தியா நிராகரிக்கிறது,” என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
