
2025-26 நிதியாண்டில் இந்தியா சாதனை அளவாக 860 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சமூக ஊடகப் பதிவு ஒன்றில், உலகளாவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் எட்டப்பட்டுள்ள இந்தச் சாதனை மைல்கல், நாட்டின் மீள்திறனையும், உலக வர்த்தக அரங்கில் தனது தடத்தை விரிவுபடுத்துவதில் இந்தியா பெற்றுவரும் வளர்ந்து வரும் வலிமையையும் பிரதிபலிப்பதாக திரு. கோயல் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒன்பது வர்த்தக ஒப்பந்தங்கள், இந்த வளர்ச்சி வேகத்தை மேலும் துரிதப்படுத்தி வருவதாகவும்; இதன் மூலம் புதிய சந்தைகள் திறக்கப்படுவதோடு, பல்வேறு துறைகளிலும் பரந்த வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தொழில் செய்வதை எளிதாக்குவதற்கும், தொழில் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள், இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும்; இது ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) எனும் இலக்கை நோக்கிய நாட்டின் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், இந்தச் சாதனையைப் பாராட்டியுள்ள ASSOCHAM அமைப்பின் தலைவர் நிர்மல் மிண்டா, கடுமையான உலகளாவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் வலுவான மீள்திறனை இந்தச் சாதனை பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார். சேவைகள் ஏற்றுமமையின் முன்னெடுப்பிலும், பொறியியல் மற்றும் மின்னணுவியல் போன்ற முக்கியத் துறைகளின் ஆதரவோடும் எட்டப்பட்டுள்ள இந்த வலுவான செயல்பாடு, இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய போட்டித்தன்மையை உறுதிப்படுத்துவதாக திரு. மிண்டா குறிப்பிட்டார். இந்தச் சாதனை மைல்கல், அரசின் பயனுள்ள கொள்கை ஆதரவையும், தொழில் துறையினரின் தீவிர முயற்சிகளையும் எடுத்துக்காட்டுவதாகவும்; இது நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிப் பாதையின் மீதும், பல்வேறு உலகளாவிய சந்தைகளில் இந்தியாவின் விரிவடைந்து வரும் இருப்பின் மீதும் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் அவர் கூறினார். உலகச் சந்தைகளில் இந்தியாவின் போட்டித்தன்மை தொடர்ந்து அதிகரித்து வருவதன் உந்துதலால், நடப்பு நிதியாண்டான 2026-27-இல் இந்தியாவின் ஏற்றுமதி ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவைத் தாண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
