
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வில், பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட சுடுமண்ணால் தயாரிக்கப்பட்ட காதணி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் உள்ளிட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளதாக திரு. தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். பதிவில், “வெம்பக்கோட்டை அகழாய்வில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய காதணி, மணிகள், சங்கு வளையல்கள் போன்றவை கிடைத்துள்ளன. இந்தக் கண்டெடுப்புகள் நம் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையை மீண்டும் நிரூபிக்கின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 7) எக்ஸ் தள பக்கத்தின் முழு பதிவு:
“தமிழரின் வரலாற்றைத் தாங்கிப்பிடிக்கும் வெம்பக்கோட்டை!
நம் தமிழரின் மரபையும், பெருமையையும் பறைசாற்றும் விதமாக வெம்பக்கோட்டைத் திகழ்ந்து வருகிறது. வெம்பக்கோட்டையில் அகழாய்வுப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், முன்னதாக உடைந்த நிலையில் கிடைத்த காதணி தற்போது முழுமையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது சுடுமண்ணால் செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.
அது மட்டுமின்றி அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் உடைந்த நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் கண்ணாடி, சுடுமண்ணால் செய்யப்பட்ட பைக் கோன் என்று சொல்லக்கூடிய இருமுனை கூம்பு வடிவில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மணிகளும் பல கிடைக்கப் பெற்றுள்ளன என்பது, பல்லாயிரம் ஆண்டு முன்பு வாழ்ந்த தமிழரின் வரலாற்று வாழ்வியல் தடயங்களைக் காட்டுகிறது.” என அமைச்சர் பதிவிட்டிருந்தார்.
வெம்பக்கோட்டை, விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி, காதணி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் உள்ளிட்ட 3,350 க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.

அதே போல கடந்தாண்டு இறுதியில் புதிதாக தோண்டப்பட்ட குழியிலும் விரலால் சுண்டி விளையாடப்படும் சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருள், சங்கு வளையல்கள், ஆணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள் போன்ற தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்தாண்டு ஜூன் 18 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெம்பக்கோட்டையில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகள், தமிழர் பழங்கால வாழ்க்கை முறையை மற்றும் அவர்களது கலாசாரத்தை வெளிச்சத்தில் கொண்டுவரும் வகையில் முன்னேறி வருகின்றன. இந்தக் கண்டெடுப்புகள் வரலாற்று ஆய்வாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.