
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு தான் தான் காரணம் என்றதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மே 15) மறுத்துவிட்டார். ஏற்கனவே போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் கூறிய கூற்றுக்களை இந்தியா நிராகரித்தது, போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளின் இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையே நடைபெற்றதாகக் கூறியது.
கத்தார் பயணத்தின் போது, அமெரிக்க வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் உரையாற்றிய டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மாற்றினார். “நான் அப்படித் தான் கூறினேன் என்று சொல்ல விரும்பவில்லை, ஆனால் கடந்த வாரம் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்க்க நான் உதவினேன்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் வரி பிரச்சினையைக் குறிப்பிட்டு, அமெரிக்க அதிகாரிகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தகம் குறித்துப் பேசியதாகக் கூறினார். இந்தியாவும் பாகிஸ்தானும் சுமார் 1000 ஆண்டுகளாக சண்டையிட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறியதை இந்தியா நேரடியாக நிராகரித்தது. வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செவ்வாயன்று (மே 13) போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே எந்த மூன்றாம் தரப்பு தலையீடும் இல்லாமல் நேரடியாக எட்டப்பட்டது என்று கூறினார்.
டிரம்பின் பெயரைக் குறிப்பிடாமல், ஜெய்ஸ்வால், “ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியாக தீர்க்க வேண்டும் என்ற நீண்டகால தேசிய நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம். அந்தக் கொள்கை மாறவில்லை” என்றார்.