மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளுக்கு நகரும் நிலையில் உள்ளது. இதனால், தமிழ்நாட்டின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் இரண்டு நாட்களுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், 25ஆம் தேதி புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.