Saturday, January 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

பெண்கள் மட்டும் இழுக்கும் தேர்த்திருவிழா!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் டிசம்பர் 23ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் வெகு விமர்ச்சியாக நடைபெறும் என்பது நாம் அறிந்த ஒன்று. இந்த நிலையில் மார்கழி மாதத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியாகக் அஷ்டமி சப்பரம் என்னும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதாவது, மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம். அதிகாலையில் கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு வெளி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது போல் இந்த ஆண்டு வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் இத்திருவிழா நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சார்பாக செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாச்சாரியர்கள் பலரும் வீதிகளில் அரிசியை தூவிக்கொண்டே வருவதும்,அம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது என்பது தனிச்சிறப்பாகும். மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் பக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு எடுத்துக் கொண்டு செல்வார்கள். திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், அள்ள அள்ள அண்ணம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.