வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற மேலும் 24 மணி நேரம் ஆகலாம். அதன் பின்னர், தமிழகம் மற்றும் இலங்கை கரைக்கு அருகில் சென்றடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்கள் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று கனமழை குறித்த மஞ்சள் ‘அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். நாளையும் நாளை மறுதினமும் இங்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.