
சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக, தமிழக விவசாயிகள் அவரை நேரில் சந்தித்து முக்கனி (மா, பலா, வாழை) வழங்கி பாராட்டினார்கள்.
சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலின்போது, நெல் குவிண்டால் ஒன்றிற்கு ₹3,100 கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்தவுடன், முதல்வர் விஷ்ணு தியோ சாய் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, விவசாயிகளுக்கு குறித்த தொகையை வழங்கினார். இதன் காரணமாக, இந்த ஆண்டு 1.50 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் புதிய வரலாறு படைத்துள்ளது.
இதனை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு காவிரி சமவெளி மாவட்ட விவசாய பிரதிநிதிகள் முதல்வரை நேரில் சந்தித்து, பாராட்டை தெரிவித்தனர். தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் தலைமையில், தஞ்சை, நாகை, திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
விவசாயிகள், முதல்வர் விஷ்ணு தியோ சாய் மற்றும் சத்தீஸ்கர் மாநில உணவுத்துறை செயலாளர் அன்பழகன் ஆகியோரை சந்தித்து, முக்கனிகளும் (மா, பலா, வாழை), தென்னங்கன்றுகளும், நெல் மாலையும் வழங்கினர்.
விவசாயிகள் கருத்து:
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:
“சத்தீஸ்கர் முதல்வரின் இந்த முடிவு இந்தியாவிலேயே முன்மாதிரியாகும். இதன் மூலம், நெல் உற்பத்தி அதிகரித்து, மாநில விவசாயிகள் பெரும் பயன் அடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக அவரை பாராட்டினோம். தமிழ்நாடு முதல்வரும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினால், அவரையும் பாராட்ட தயாராக உள்ளோம்.” என்றனர்.