
தெருநாய்கள் கட்டுப்பாடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட கடும் கண்டனத்தையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.முருகானந்தம் இன்று நேரில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்.
தெருநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காத மாநிலங்கள் மீது முன்பு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, மேற்கு வங்காளம் மற்றும் தெலுங்கானா தவிர்ந்த அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், நவம்பர் 3 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த அக்டோபர் 27 அன்று உத்தரவிடப்பட்டது.
மேலும், ஆஜராகாமல் விடுபட அனுமதி கேட்டு சில மாநிலங்கள் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனால், இன்று நடைபெற்ற விசாரணையில், தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் உட்பட பல மாநில தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜரானனர்.
தமிழகத்தின் பிரமாணப் பத்திரம் தாக்கல்:
தமிழக அரசு சார்பில், தெருநாய்கள் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவான பிரமாணப் பத்திரம் (affidavit) தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களின் தலைமைச் செயலர்களும் தங்களது பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தனர். அப்போது, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்காக, தமிழகம் உட்பட சில மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு (unconditional apology) கோரினர்.
உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்:
விசாரணையின் போது, தாக்கல் செய்யப்பட்ட அனைத்து பிரமாணப் பத்திரங்களையும் ஒருங்கிணைத்து சுருக்கமாக தொகுக்கும்படி, வழக்கறிஞர் கவுரவ் அகர்வால் அவர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மாநிலங்கள் தெருநாய்கள் கடி சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் மேற்கொண்ட நடவடிக்கைகளை விரிவாக ஆய்வு செய்த பிறகு, கூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், அதுவரை முன்னைய உத்தரவு தொடரும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதனையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னணி:
நாடு முழுவதும் தெருநாய்களின் தாக்குதலால் பொதுமக்கள் உயிரிழப்புகள், குழந்தைகள் மீது கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை அடுத்து, ஒவ்வொரு மாநிலமும் தெருநாய்கள் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் பல முறை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மாநில தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜரானது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு மாநிலங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
