Thursday, March 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம். நாசா விளக்கம்!

நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாம் அனைவரும் அறிந்த ஒரு பிரபலம் ஆவார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்த இவர் மூன்றாவது முறையாக கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் அவரும், பேரி வில்மோரும் விண்வெளி நிலையம் சென்று 8 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

கடந்த 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம்’ என நாசா விளக்கம் அளித்துள்ளது.

அவர்களை மீட்க தொடர் முயற்சிகள் எடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. கடைசியில் ஸ்டார்லைனரில் விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவது மிகவும் ஆபத்தானது என்று விண்வெளி நிறுவனம் அறிவித்தது. சுனிதா, இவர்கள் இல்லாமலேயே கடந்த செப்டம்பரில் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்குத் திரும்பியது.

இதையடுத்து இருவரையும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் பூமிக்கு அழைத்து வர நாசா முடிவு செய்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டுவருவேன் என உறுதி அளித்தார்.

சில தினங்களுக்கு முன், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோரும் எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16ல் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்து இருந்தது. ஆனால் புளோரிடாவில் டிராகன் விண்கலத்துடன் தயாராக இருந்த பால்கன் 9 ராக்கெட்டில், கடைசி நிமிடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.18 மணிக்கு டிராகன் விண்கலத்தை ஏவ இருந்த நிலையில் கடைசி நிமிடம் ஏற்பட்ட கோளாறால் ஒத்திவைக்கப்பட்டது.

சுனிதாவை அழைத்து வரும் க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம். சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர மீண்டும் ராக்கெட் ஏவக் கூடிய தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நாசா விளக்கம் அளித்துள்ளது.