Thursday, August 20பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்களால் கருத்தடைக்காகப் பயன்படுத்தப்பட்ட, ஒரு அதிசயத் தாவரம்!

சில்ஃபியம் (Silphium) என்பது அபார மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு தாவரமாகும்; இது 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்து மறைந்துபோனது. பண்டைய கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் எகிப்தியர்கள் இதனைச் சமையலிலும், கருத்தடைக்காகவும் பயன்படுத்தினர். துருக்கியப் பேராசிரியர் ஒருவர், ஒரு மலையில் இத்தாவரத்தைக் மீண்டும் கண்டறிந்துள்ளதாகக் கருதுகிறார். தங்க நிற மலர்களைக் கொண்ட இந்தத் தாவரம் துருக்கியில் இரண்டு இடங்களில் கண்டறியப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மத்திய தரைக்கடல் பகுதியில் மிகவும் பிரபலமான தாவரங்களில் ஒன்றாக ‘சில்ஃபியன்’ அல்லது ‘சில்ஃபியம்’ திகழ்ந்தது.

இத்தாவரத்தின் மலர்கள் மனித ஆரோக்கியத்திற்கு மிகுந்த மதிப்புடையவையாகக் கருதப்பட்டு, பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டன. பண்டைய கால மக்கள் மருத்துவ நோக்கங்களுக்காக இதன் சாற்றைப் பிரித்தெடுக்க இதை நசுக்கிப் பயன்படுத்தினர். இம்மலர் பல விதங்களில் சமைத்தும் உண்ணப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, இதே மலர் கருத்தடை முறையாகவும் செயல்படக்கூடியதாக இருந்தது.

ஜூலியஸ் சீசர் ஆட்சி செய்த காலத்தில், சில்ஃபியம் வெள்ளிக்கு இணையான விலையைக் கொண்டிருந்ததாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. அவரது பணியாளர்கள் கருவூலத்தில் தங்கத்துடன் சேர்த்து, ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான இத்தாவரத்தைச் சேமித்து வைத்திருந்தனர். ரோமில் இத்தாவரம் அந்தளவுக்கு மதிப்புமிக்கதாக இருந்தது. சயிரெனாய்கா (Cyrenaica) கடற்கரைப் பகுதியில் – அதாவது இன்றைய லிபியாவில் – இத்தாவரம் வளர்ந்ததாக இதன் முதல் ஆவணக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஏழு நூற்றாண்டுகளுக்குள்ளேயே இது மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து மறைந்துவிட்டது.

கி.பி. முதல் நூற்றாண்டில், இத்தாவரத்தின் “ஒரே ஒரு தண்டு” மட்டுமே காணப்பட்டதாக ரோமானிய வரலாற்றாசிரியர் மூத்த பிளினி (Pliny the Elder) குறிப்பிட்டுள்ளார். சில்ஃபியன் பற்றிய கடைசி ஆவணப் பதிவான ‘நேச்சுரல் ஹிஸ்டரி’ (Natural History) என்ற நூலில் அவர் இதைப் பற்றி எழுதியுள்ளார். அந்தத் தண்டு பேரரசர் நீரோவிடம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிசயத் தாவரம் பற்றிய கதைகள் பிற்கால ஆய்வாளர்களை ஈர்த்தன; அவர்கள் இடைக்காலத்தில் மூன்று கண்டங்களிலும் அதைத் தேடினர். ஆனால் ஒரு தாவரம், விலங்கு அல்லது உயிரினம் அழிந்துபோனதற்கான முதல் பதிவாகக் கருதப்படும் நிகழ்வில், அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. காலப்போக்கில், அது குறித்த கதைகள் மறைந்து போயின. ஆனால் இப்போது, ​​இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், இத்தாவரம் பூமியில் இன்னும் இருப்பதாகவும், அது தனது பூர்வீக இடத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் காணப்படுவதாகவும் கூறுகிறார்.

ஹசன் மலையில் வளரும் ‘ஃபெருலா ட்ரூடானா’ (Ferula Drudeana) என்ற தாவரமே, அந்த அதிசய மருத்துவ குணங்களைக் கொண்ட பண்டைய தாவரம் என்று மஹ்முத் மிஸ்கி (Mahmut Miski) கருதுகிறார். பண்டைய நூல்களில் சில்ஃபியன் பற்றி விவரிக்கப்பட்டுள்ள அம்சங்களுடனும், பண்டைய கிரேக்க நாணயங்களில் உள்ள படங்களுடனும் இது ஒத்துப்போவதாக அவர் கூறுகிறார். இதன் தடிமனான கிளைகளைக் கொண்ட வேர் மற்றும் மஞ்சள் நிற மலர்கள் ஆகியவை அந்தப் பண்டைய தாவரத்தைப் போலவே இருப்பதாக மிஸ்கி குறிப்பிடுகிறார். ஃபெருலா ட்ரூடியானா புற்றுநோயை எதிர்க்கும் சேர்மங்களையும் கொண்டுள்ளது, மேலும் இது கேரட், பெருஞ்சீரகம் மற்றும் பார்ஸ்லி ஆகியவைகளின் குடும்பத்தைச் சேர்ந்தது.

மிஸ்கி தனது முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆராய்ச்சியின் போது ஹசன் மலையில் இதை முதன்முதலில் பார்த்ததாகக் கூறுகிறார். புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மற்றும் கருத்தடை உட்பட மருத்துவப் பயன்களைக் கொண்ட முப்பது மாற்றப் பொருட்கள் இதில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.