
அக்டோபர் 13, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 90 நிமிட அறுவை சிகிச்சையின்போது போப் லியோவின் வலது நுரையீரலின் கீழ்ப்பகுதி (lobe) அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வத்திக்கான் மருத்துவ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
71 வயதான போப் லியோவுக்கு ‘நுரையீரல் அடினோகார்சினோமா’ (lung adenocarcinoma) எனும் பொதுவான வகை நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகளின் அடிப்படையில் மருத்துவர்கள் சந்தேகித்த இந்த நோய், அறுவை சிகிச்சையின்போது மேற்கொள்ளப்பட்ட திசுப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
சமீபத்திய மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்ட கட்டியை அகற்றுவதற்காக, செவ்வாய்க்கிழமையன்று ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் லியோ அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக வத்திக்கான் முதலில் அறிவித்தது; பின்னர், மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவரும் போப்பின் முதன்மை அறுவை சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் ஸ்டெஃபானோ மார்கரிடோராவிடமிருந்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்பட்டன. நோயைக் குணப்படுத்தும் நோக்கில், வீடியோ உதவியுடனான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போப்பின் வலது நுரையீரலின் கீழ்ப்பகுதி அகற்றப்பட்டதாக மார்கரிடோரா தெரிவித்தார்.
அறுவை சிகிச்சையின்போது மேற்கொள்ளப்பட்ட திசு மாதிரிகளின் விரைவான பரிசோதனையில், அறுவை சிகிச்சைக்கு முன் சந்தேகிக்கப்பட்டபடியே ‘நுரையீரல் அடினோகார்சினோமா’ இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கை கூறியது. சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த அறுவை சிகிச்சை எவ்வித சிக்கலுமின்றி நிறைவடைந்தது. போப் இயல்பாகவே மயக்கத்திலிருந்து விழித்தெழுந்து, மருத்துவமனை அறையில் ஓய்வெடுத்து வருவதாக வத்திக்கான் தெரிவித்தது. அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் அந்த அறிக்கையில் வழங்கப்படவில்லை.
மே 2025-ல் உலகின் கர்தினால்களால்(Cardinals) தேர்ந்தெடுக்கப்பட்ட லியோ, போப் பதவியில் இருந்தவர்களில் ஒப்பிட்டால் இவர் இளையவர் ஆவார். 1955-ல் சிகாகோவில் ராபர்ட் பிரெவோஸ்ட் என்ற பெயரில் பிறந்த இவர், கத்தோலிக்க திருச்சபையின் தலைவராவதற்கு முன்பு பெரு நாட்டில் பல தசாப்தங்களாக மறைப்பணியாளராகவும் ஆயராகவும் பணியாற்றினார். டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வமுள்ள இவர், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர். தற்போதைய உடல்நலப் பிரச்சனைக்கு முன்பு, அவருக்குப் பெரிய அளவில் உடல்நலக் குறைபாடுகள் எதுவும் இருந்ததாகத் தகவல் இல்லை.
இவருக்கு முந்தையவரான போப் பிரான்சிஸ், தனது பிற்காலங்களில் உடல்நிலை மோசமடைந்ததால் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரான்சிஸ் 2025 ஏப்ரல் மாதம் தனது 88-வது வயதில் காலமானார். லியோ மிகவும் பரபரப்பான பணி அட்டவணையைப் பின்பற்றுகிறார்; நவம்பர் 6 முதல் 17 வரை உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் 11 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். பெருவின் சுலுக்கானாஸ் (Chulucanas) பகுதியில் இளம் பாதிரியாராகப் பணியாற்றியபோது, 1985-ல் தனக்கு ஏற்பட்ட கடுமையான டைபாய்டு காய்ச்சல் குறித்து லியோ முன்பு பேசியுள்ளார். அந்த நோய் பாதிப்பின்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
‘பெங்குவின் பெரு’ (Penguin Peru) வெளியிட்ட ஒரு புத்தகத்தில் இடம்பெற்ற நேர்காணலில், தாங்க முடியாத வலியால் அவதிப்பட்டபோது, தொடர்ந்து துன்பப்படுவதை விட மரணமே மேல் என்று இறைவனிடம் வேண்டியதை போப் நினைவு கூர்ந்தார். பின்னர், தான் உயிர் பிழைத்ததை பூமியில் தனக்கென இன்னும் ஒரு நோக்கம் இருப்பதற்கான அறிகுறியாக அவர் கருதினார். “எங்களுக்கு நீ இங்கே தேவைப்படுகிறாய்” என்பதே அந்தச் செய்தியாகத் தனக்குத் தோன்றியதாக அவர் குறிப்பிட்டார். “அதன்பிறகு நான் ஒருபோதும் பின்னோக்கிப் பார்க்கவில்லை,” என்று லியோ கூறினார்.
உலகம் முழுவதும் சுமார் 140 கோடி (1.4 பில்லியன்) பின்பற்றுநர்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் மிக உயர்ந்த அதிகார மையமாக போப் விளங்குகிறார். போப் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது அவரது பொறுப்புகளைத் தானாகவே ஏற்றுக்கொள்வதற்கு என்று எந்தத் துணை அதிகாரியும் இல்லை; இருப்பினும், போப் செயல்பட முடியாத சூழலிலும் வத்திக்கானின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
