
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அக்டோபர் 24 முதல் 26 தேதி வரை நடைபெறவுள்ள ஆசியான் உச்சிமாநாட்டில், ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப் பதற்றம் நீடித்து வரும் சூழலில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது என்பதால், இது அரசியல் முக்கியத்துவம் மிகவும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேரடியாக மாநாட்டில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில், மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்தையும், வரவிருக்கும் உச்சிமாநாடு வெற்றியடையவும் வாழ்த்தியுள்ளார்.
தனது சமூக வலைதளப் பதிவில் மோடி தெரிவித்துள்ளார்: “எனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் தொலைபேசியில் உரையாடினேன். மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்தேன். ஆசியான் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பங்கேற்க ஆவலுடன் உள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், மலேசியா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட பல நாடுகளின் தலைவர்களை மாநாட்டில் பங்கேற்க அழைத்துள்ளது. டிரம்ப் அக்டோபர் 26ம் தேதி கோலாலம்பூருக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக வர உள்ளார் என வெளிநாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆசியான் கூட்டமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இம்மாநாடு ஆசிய நாடுகளின் பொருளாதார மற்றும் தூதரக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கியமான அரங்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
