Tuesday, July 1பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு: 8 மாவட்டங்களில் தொடர்ந்து மழை வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மற்றும் நாளையும் எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலத்த மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக மிக கனமழை எதிர்ப்பார்க்கப்படுவதால் ‘ரெட் அலர்ட்’ (அதிக அபாய எச்சரிக்கை) வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை வரை) அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பின்னர், நீலகிரியின் அவலாஞ்சியில் 14 செ.மீ.; சாம்ராஜ் எஸ்டேட், மேல்பவானி மற்றும் திருநெல்வேலியின் நாலுமுக்கு பகுதிகளில் தலா 13 செ.மீ.; ஊத்து, காக்காச்சி பகுதிகளில் தலா 12 செ.மீ.; சோலையார் (கோவை) 11 செ.மீ.; மாஞ்சோலை (திருநெல்வேலி), குந்தாபாலம் (நீலகிரி) ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிகவும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ‘ஆரஞ்சு அலர்ட்’ (மிதமான அபாய எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மணிக்கு 40–50 கிமீ வேகத்தில், இடையிடையே 60 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கவனம் தேவையாகும்.

5 நாள்களில் 108 செ.மீ. மழை பதிவு!

வானிலை மையத் தலைவர் அமுதா கூறியதாவது: நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பதிவாகி வருகிறது. இதில் நீலகிரியின் அவலாஞ்சியில் மட்டும் 108 செ.மீ. மழை விழுந்துள்ளதாகத் தகவல் உள்ளது. சின்னக்கல்லார் பகுதியில் 70 செ.மீ., மேல்பவானி மற்றும் எமரால்டு பகுதிகளிலும் தலா 70 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.