Friday, June 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

மும்பையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை – ரயில், விமான சேவைகள் பாதிப்பு!

மஹாராஷ்டிராவில் கடந்த 35 ஆண்டுகளுக்குப் பிறகு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மும்பையில் இடையறாத கனமழை பெய்து, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இன்று (மே 27) காலை 8.30 மணி வரை ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையால் நகரம் முடங்கியது

நேற்று நள்ளிரவிலிருந்து தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்ததால், மும்பையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலைகளில் குளங்களைப்போல் தேங்கிய மழைநீர், வாகன போக்குவரத்தை கடுமையாக பாதித்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்கம்பங்கள் இடிந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்தது.

ரயில்-விமான சேவைகள் பாதிப்பு

மழைநீரால் ரயில் தண்டவாளங்கள் மூழ்கியதால் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. வோர்லி பகுதியில் உள்ள மெட்ரோ நிலையம் வெள்ளத்தில் மூழ்கி, மெட்ரோ சேவையும் தடைப்பட்டது.

100 ஆண்டுகளில் இல்லாத மழை பதிவாகியது

கடந்த 1918ல் மே மாதத்தில் 28 செ.மீ. மழை பதிவாகியிருந்தது. ஆனால் இம்முறை, 107 ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பையில் மே மாதத்திலேயே 29 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்

குர்லா, சியோன், தாதர், பரேல் உள்ளிட்ட மும்பையின் முக்கிய பகுதிகள் வெள்ள பாதிப்பால் மிகுந்த சிரமங்களை சந்தித்துள்ளன. முன்னெச்சரிக்கையாக சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மக்களின் தினசரி வேலைகளும் பாதிக்கப்பட்டது.

வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டில் முன்னதாகவே துவங்கியுள்ளதாகவும், இது தொடர்ந்து மும்பை மற்றும் பிற பகுதிகளில் மேலும் மழையைத் தூண்டும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.