
அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் ஈரானைத் தாக்கினால், வளைகுடாப் பகுதியில் உள்ள கடலடி தகவல் தொடர்பு கேபிள்களை தாக்குவோம் என ஈரானின் இரண்டு மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
“ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், எந்தவொரு ‘சிவப்புக் கோடும்’ (எல்லைகளும்) இருக்காது… கடலடி கேபிள்கள் முதல் இராணுவத் தளங்கள் வரை, ஏன் மறைமுகத் தளங்கள் கூட தாக்குதலுக்கு உள்ளாகும்” என்று அந்த அதிகாரி கூறினார்.
“அமெரிக்கா நெருப்புடன் விளையாட வேண்டாம்” என்று எச்சரித்த அந்த அதிகாரி, கடலடி கேபிள்களை அணுகும் முழு வசதியும் ஈரானுக்கு இருப்பதாகவும், அவற்றை எளிதில் அழிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
ஈரானின் புரட்சிகர காவல் படையின் (IRGC) அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் யடோல்லா ஜவானி புதன்கிழமையன்று கூறுகையில், ஈரானின் உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், ஹோர்முஸ் நீரிணைக்கு அடியில் உள்ள ஏழு முக்கிய இணைய கேபிள்களை ஈரான் இலக்கு வைக்கக்கூடும் என்று தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) தகவல்படி, உலகளாவிய இணையப் போக்குவரத்தில் சுமார் 99 சதவீதம் கடலடி கேபிள்கள் மூலமே நடைபெறுகிறது. இருப்பினும், தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனமான ‘டெலிஜியோகிராபி’ (TeleGeography)-ன் ஆராய்ச்சி இயக்குநர் ஆலன் மால்டின் கருத்துப்படி, சர்வதேச அலைவரிசையில் (bandwidth) ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவே ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதால், ஈரான் இத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் அதன் உலகளாவிய தாக்கம் குறைவாகவே இருக்கும்.
போர்க்காலத்தில் இணைப்புகளை மீட்டெடுப்பது கடினமாக இருக்கலாம் என்றும், அதிக காப்பீட்டுச் செலவுகள் மற்றும் பிராந்திய நீர்ப்பரப்புகளுக்குள் நுழைவதற்கான அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் பழுதுபார்ப்புப் பணிகளை மேலும் சிக்கலாக்கும் என்றும் நிபுணர்கள் கூறினர்.
