சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.,) வெளியில் கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியுள்ளார்.
பத்திரிக்கை நிருபர்களை சென்னையில் சந்தித்த போது அவர் கூறியதாவது: “சம்பவம் நடந்த பிறகு, பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே பதிவு செய்வது தான் எப்.ஐ.ஆர்., கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சந்தேகப்பட்ட நபர்களை அழைத்து விசாரித்தோம். அறிவியல் பூர்வமான விசாரணைக்கு பிறகு 25ம் தேதி காலை குற்றவாளியை கைது செய்தோம். அவன் தான் குற்றத்தை செய்தான் என்பதை உறுதி செய்து, சிறையில் அடைத்தோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எப்.ஐ.ஆர்., இணையத்தில் பதிவேற்றம் செய்யும் போது அது தானாக ‘பிளாக்’ ஆகிவிடும். ஐ.பி.சி.,க்கு பதில் பி.என்.எஸ்., சட்டத்தில் வழக்குப்பதிவு செய்கிறோம். தொழில்நுட்ப பிரச்னை காரணமாக பிளாக் ஆவது தாமதமானது. அந்தநேரத்தில் ஒரு சிலர் அதனை பார்த்து தரவிறக்கம் செய்துள்ளனர். அவர்கள் மூலம் எப்.ஐ.ஆர்., கசிந்து இருக்கலாம். புகார் அளித்தவருக்கு எப்.ஐ.ஆர்., அளிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவருக்கு அளித்தோம்.பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியில் சொன்னாலும் நடவடிக்கை எடுப்போம்.பாலியல் வழக்கில், எப்.ஐ.ஆர்., கசிவு செய்வது குற்றம். எதை எடுத்து விவாதம் செய்வது பெரிய குற்றம். பாதிக்கப்பட்டவர்களின் விவரம் எந்த வகையிலும் வெளியிடக்கூடாது. எப்.ஐ.ஆர்.,ஐ கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம்.”