
2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக அரசு உத்தரவு. தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் என 92 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீதான சுமார் 600 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 2, 2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், 2021 மே மாதம் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்திருந்தார்.
விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம், விவசாய நிலங்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஆசிரியர்கள் தங்களது பணிசார் கோரிக்கைகள் மற்றும் உரிமைகளை வலியுறுத்தியும் ஜனநாயக முறையில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மற்றும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகளும் இந்த நடவடிக்கையின் கீழ் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தும் உரிய சட்ட விதிகளின்படி ஆய்வு செய்யப்பட்டன. இதில், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட சுமார் 600 வழக்குகள் கண்டறியப்பட்டு, அவற்றைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், அந்த வழக்குகளில் தொடர்புடைய 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்த விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்துவதுடன் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை மேம்படுத்தும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
