Wednesday, September 30பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தீவிரவாதி ‘மூசா’ சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள யூஸ்மார்க் (துத்பத்ரி) வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில், லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் முக்கிய தீவிரவாதியான ‘மூசா’ சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 29, 2026 செவ்வாய்க்கிழமை, சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்த உளவுத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கோராக், யூஸ்மார்க் மற்றும் குர்வெத்கலான் பகுதிகளை உள்ளடக்கிய வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆகியவை இணைந்து செயல்பட்டன.

தேடுதல் நடவடிக்கையின்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியான மூசா சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீர் பஞ்சால் மலைத்தொடர் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் மூசாவுக்கு தொடர்பு இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் அவர் பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த முக்கிய நபராக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய மற்றொரு என்கவுன்டரின்போது, மூசாவின் நெருங்கிய கூட்டாளியான யாசிர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நடவடிக்கையின்போது மூசா அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது யூஸ்மார்க் வனப்பகுதியில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூசா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதைக் கண்டறியும் வகையில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால், அப்பகுதி முழுவதையும் சோதனை செய்து பாதுகாப்பானதாக உறுதி செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.