Thursday, September 24பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

சூடு பிடிக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவிக்கும் தாராபுரம் த.வெ.க வேட்பாளர்!

திருப்பூர்: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக செயல்படுவதாக அக்கட்சியின் வேட்பாளர் சத்தியபாமா குற்றம்சாட்டியுள்ளார்.

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமா போட்டியிடுகிறார். கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றிருந்தார். பின்னர் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தார். தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அவர் மீண்டும் அதே தொகுதியில் தவெக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

“திமுக-அதிமுக இணைந்து செயல்படுகின்றன”:

தேர்தல் பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சத்தியபாமா, தாராபுரம் தொகுதியில் தவெகவை வீழ்த்துவதற்காக அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் இணைந்து செயல்படுவதாகக் கூறினார். அதிமுகவில் இருந்தபோது அந்தக் கட்சியின் தலைமை எடுத்த சில அரசியல் முடிவுகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், குறிப்பாக அதிமுக-திமுக இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்ததைத் தொடர்ந்து தான் அதிமுகவில் இருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், “தாராபுரம் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் இணைந்து தவெகவை வீழ்த்த முயற்சிக்கின்றனர்; அது ஒருபோதும் நடக்காது” என்று சத்தியபாமா பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் களத்தில் அதிகரிக்கும் அரசியல் மோதல்:

தாராபுரம் தொகுதியில் தற்போது தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. தவெக சார்பில் சத்தியபாமாவும், திமுக சார்பில் சுகன்யாவும், அதிமுக சார்பில் பானுமதியும் களத்தில் உள்ளனர். சத்தியபாமா அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது முதல் தாராபுரம் இடைத்தேர்தல் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது. அவரது கட்சி மாற்றம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பிரசாரக் களத்திலும் அவருக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

“விஜய் புகைப்படம் ஒட்டாத வீடுகளில்…”:

இதற்கிடையே, வீடு வீடாகச் சென்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை ஒட்டும் பணியில் தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என்றும், புகைப்படத்தை ஒட்ட வேண்டாம் எனக் கூறும் வீடுகளில் தவெகவுக்கு வாக்கு கிடைக்காது எனக் கருதலாம் என்றும் சத்தியபாமா பேசியிருந்தார். இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தொகுதியில் தேர்தல் பிரசாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.