
சென்னை, செப். 24: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மொத்தம் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வடகிழக்குப் பருவமழை காலங்களில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 1,671 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால்களை தூர்வார ரூ.22.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வார்டுகளுக்கு தனியாக நிதி
மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் அவசரப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் அளவில் தேவையான தூர்வாருதல், மரக்கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீரை விரைவாக வெளியேற்றுவதற்காக 150 உயர் திறன் கொண்ட 100 HP மோட்டார் பம்புகள் மற்றும் 500 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.26.53 கோடி மதிப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1,000 கூடுதல் பணியாளர்கள்
மழைக்கால அவசரப் பணிகளுக்காக ஒவ்வொரு வார்டுக்கும் 5 பேர் வீதம் கூடுதலாக 1,000 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாருதல், அபாயகரமான மரக்கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
மோட்டார் பம்புகள் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டிகளை இயக்குவதற்காக தற்காலிக பணியாளர்களை நியமிக்கவும் ரூ.4.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்குவதற்காக 15,000 அவசரகால நிவாரணப் பெட்டிகள் கொள்முதல் செய்ய ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் மூலம் கண்காணிப்பு
சென்னையில் உள்ள கால்வாய்கள் மற்றும் நீர்வழித்தடங்களில் ஏற்படும் அடைப்புகளை கண்டறிந்து, தூர்வாரும் பணிகளை திட்டமிடுவதற்காக ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சாரத்துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க இலக்கு
சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகள், நீர்வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை அகற்றுதல், மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
