
புவனேஸ்வர், செப்டம்பர் 24, 2026:
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக ஒடிசாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. செப்டம்பர் 24-ஆம் தேதி மாநிலத்தில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை அமைப்பு வட ஆந்திரப் பிரதேசம் – தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகர்ந்த நிலையில், தெற்கு மற்றும் கடலோர ஒடிசாவில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை:
ஒடிசாவில் கந்தமால், கஜபதி, கஞ்சம், பூரி, கலஹண்டி மற்றும் ராயகடா உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தெற்கு ஒடிசா மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலத்த மழை மற்றும் காற்று காரணமாக கஞ்சம், கஜபதி மாவட்டங்களில் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக உள்ளூர் நிர்வாகம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25 மற்றும் 26-ல் மிக கனமழை, செப்டம்பர் 27-ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் சூழலும் தொடரக்கூடும். இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
