
அரசுத் துறை மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித்தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்-அமைச்சர் விஜய், தமிழின் பெருமை, தமிழ்நாட்டின் அடையாளம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
“தமிழ் என்றால் தனி பவர்”:
அப்போது பேசிய முதல்-அமைச்சர் விஜய், “இந்தியாவின் நெற்றியில் வைக்கக்கூடிய வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றால் கெத்து; தமிழ் என்றால் அது தனி பவர். ஒரு பெயரே, ஒரு சொல்லே மிகப்பெரிய வரலாறாக இருந்தால் அது தமிழ் தான்” என்று கூறினார்.
தமிழ் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்துக்கான மொழி மட்டுமல்ல என்றும், அது தமிழர்களின் உணர்வுகளோடும் அடையாளத்தோடும் பின்னிப் பிணைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல; நம் உயிர். தமிழை பேசும்போது ஓசை மட்டும் வருவதில்லை; அதனுடன் உணர்வும் வருகிறது. நமது தாய்மொழி குறித்த உணர்வை புரியவைக்க ‘தாய்மொழி’, ‘தமிழ் மொழி’ என்று சொல்வதே போதுமானது” என அவர் தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்க வேண்டும்:
அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்குவது மாநிலத்தின் உரிமை என்றும் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு எந்தவித சமரசத்தையும் செய்யாது என்று அவர் தெரிவித்தார். “உணர்வோடு கலந்திருக்கக்கூடிய தமிழை பின்னுக்குத் தள்ளினால் அதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலிடத்தில் இருக்க வேண்டும். அது நம் உரிமை” என்று அவர் கூறினார்.
அரசியல் விவாதமாக மாற்ற வேண்டாம்:
தமிழ்த்தாய் வாழ்த்தை நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாட வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியமில்லை என்றும் விஜய் குறிப்பிட்டார். தமிழ் மொழி மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை அளிப்பது என்பது கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட விஷயம் எனக் கூறிய அவர், அனைத்து அரசியல் கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அனைத்து கட்சிகளும் ஆதரவு:
முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம், கட்சி வேறுபாடுகளை கடந்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
